துர்வாச முனிவரால் தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் தீர உபமன்யு மன்னன் தினமும் அன்னதானம் செய்து வந்தான். ஒருநாள் மஹாவிஷ்ணு அந்தணர் வேடம் தாங்கி வந்து அனைத்து உணவையும் தானே உண்டார். மன்னன் வியந்து, மேலும் என்ன வேண்டும் என்று கேட்க, ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று பெருமாள் கேட்டார். உபமன்யுவும் அப்பக்குடத்தைக் கொண்டு வந்துக் கொடுக்க, திருமாலும் காட்சி தந்து மன்னன் சாபம் தீர்த்தார்.
மூலவர் அப்பக்குடத்தான் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கமலவல்லி, இந்திரா தேவி எனும் இரண்டு திருநாமங்கள். உபமன்யு மன்னன், பராசர முனிவர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
பெரியாழ்வார் 2 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 19 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 1 பாசுரமும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 33 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|